சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகைளை மேற்கொள்ளும் விதமாக மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் தொற்று நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
தற்போது எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிகாய்ச்சல் மற்றும் உண்ணி காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்குகாய்ச்சலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தினசரி சுமார் 25000 தற்காலிக பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வரை சுமார் 25,521 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தது. ஆனால் தற்பொழுது 12,543 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் உள்ளது. இருந்தாலும் இதையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மாவட்ட அளவில் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் சற்று அதிக அளவில் காணப்படுகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக இனபெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து மருத்துவமனைகளிலும் நாய் கடிக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. தாய் மாமன் தங்க மோதிரம் கொள்முதல் ஒப்பந்தம் தங்கத்திற்கான செய்கூலி, ஹால்மார்க், பேக்கிங், போக்குவரத்து மற்றும் காப்பீடு உள்ளிட்ட கட்டணங்களுக்கு கோரப்பட்டது. ஒப்பந்தத்தில் 11 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன. அதில் குறைந்த விலை புள்ளி அளித்திருந்த நிறுவனத்திற்கும், அதே அளவு விலைக்கு வழங்க ஒத்திசைவு அளித்த மற்றொரு நிறுவனத்திற்கும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் 70:30 என்ற விகிதாச்சார அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசின் பல கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
