கோவை: வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு 2025–2026 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். கைலாய யாத்திரை செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும்,

விபத்தில் பல ஊர்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதிலும் சிக்கல் இருப்பதால், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மீட்புக் குழுவை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உறுதியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கல்லூரிகளில் மாணவர்கள் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், அரசியல் குறித்து பேசுவது, அரசு அதிகாரிகளிடம் தங்களது பிரச்சினைகளை எடுத்துரைப்பது உள்ளிட்டவை மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடும் என்றும் கூறினார். கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த போதிலும், தமிழகத்தில் கல்லூரி அரசியல் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இதனால் அரசியல் கட்சிகளுக்கு வரக்கூடிய இளம் தலைவர்கள் உருவாகாமல் போய்விடுவார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.
திரைத்துறையை பொறுத்தவரை சென்சார் போர்டு விதிமுறைகள் மேலும் கடுமையாக இருக்க வேண்டும் என்றும், சென்சார் குறியீடுகளை திரைப்படங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் வெளியாகும் சில திரைப்படங்கள் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை என்றும், பெண்களை வல்கரான முறையில் காட்சிப்படுத்தும் திரைப்படங்களும் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அண்ணாமலை, சமூக வலைதளங்களால் நல்ல விஷயங்கள் நடைபெறுவதுடன், பல்வேறு தவறுகளும் நடைபெறுகின்றன என்றார். மற்ற நாடுகள் சமூக வலைதளங்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வரும் நிலையில், இந்தியா ஏன் தயங்குகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
போதைப்பொருட்களுக்கான தேவையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது பழைய பஞ்சாயத்துகளை தீர்த்துக்கொள்ளும் இடமாக சட்டமன்றம் மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துகள் கூட சட்டமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் இருக்கும் பஞ்சாயத்துகளும் அங்கேயே தீர்க்கப்படுகின்றன” என அண்ணாமலை விமர்சித்தார்.
ஆளும் கட்சி சார்பில் உள்ள உறுப்பினர்கள் பலரும் புதியவர்கள் என்றும், அவர்களும் வேகமாக முன்னேறி வருவதாகவும் கூறிய அவர், “இன்றைக்கு தமிழக சட்டமன்றம் டிராமா மன்றமாக மாறிவிடுமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது” என்றார்.
இதனிடையே, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் இதுவரை 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், 20 லட்சம் மரக்கன்றுகள் நடுவது இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
