எஸ்.சி பட்டியலில் இருந்து பிசி பட்டியலுக்கு மாற்றக்கோரி, திருச்சி ஆட்சியரகம் முன்பு தேவேந்திர குல வேளாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து விடுவித்து, மீண்டும் பிசி பட்டியலில் இணைப்பதற்கு, தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் தலைவர் அசோகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்:- தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் 1936 ஆம் ஆண்டுக்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தது. அதன்பிறகு எஸ்சி பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். இதற்காக தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு உரிய பரிந்துரையை அனுப்ப வேண்டும்; மீதமுள்ள பணிகளை நாங்கள் மத்திய அரசிடம் பேசி பார்த்துக்கொள்கிறோம். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று, அனைத்து தேவேந்திர குல வேளாளர்களையும் ஒன்றிணைத்து சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
