தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள அம்மன்புரம் கீழப்புதுக்குடியைச் சேர்ந்தவர் பீட்டர் (48). த.வெ.க. நிர்வாகியான இவர் அம்மன்புரம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார்.
அவ்விடத்தில் உள்ள பொதுப்பாதை தொடர்பாகப் பீட்டருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான ஞானராஜ் (65) என்பவருக்கும் இடையே நீண்டநாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று, அம்மன்புரம் தேவாலயம் அருகே பீட்டர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஞானராஜின் தம்பி மகன் ஆல்வின் (25) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பீட்டரை வழிமறித்தது. அவர்கள் தாங்கள் வைத்திருந்த தடி மற்றும் இரும்புக் கம்பிகளால் பீட்டரைச் சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளி மிதித்தனர். மேலும், அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துத் தப்பிச் சென்றனர்.
இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த பீட்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துக் குரும்பூர் காவல் நிலையப் உறுப்பினர்கள் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆல்வின், ஞானராஜ் உள்ளிட்ட 6 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, பீட்டர் தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
