Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடுகள், வாகனங்களில் மொய்க்கும் ஈக்கள்… கோவையில் பரபரப்பு

வாகனங்கள், வீடுகளில் மொய்க்கும் லட்சக்கணக்கான ஈக்கள்- கோவை மக்கள் அவதி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட MIRA HOMES குடியிருப்பு பகுதியில் ஈக்களின் தொல்லை எல்லை மீறி உள்ளதால், தொற்ற நோய்கள் பரவும் முன் அதிகாரிகள் உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர மனு அளித்து உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சி, கோவில்பாளையம் – நெகமம் சாலையில் அமைந்து உள்ளது காணியாளம்பாளையம் பிரிவு. இதன் சுற்று வட்டாரப் பகுதியில் அரசு அனுமதி (DTCP Approval) பெற்ற ‘MIRA HOMES’ வீட்டுமனைப் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் புதியதாக வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றனர்.

​இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஈக்களின் பெருக்கம் லட்சக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.

வீடுகளுக்குள் திரளாக நுழையும் ஈக்கள், சமைத்து வைக்கும் உணவுப் பொருட்கள், குடிநீர் பாத்திரங்கள் மற்றும் உணவருந்தும் தட்டுகளின் மீது மொய்ப்பதால், பொதுமக்கள் நிம்மதியாக உணவு கூட உட்கொள்ள முடியாத அருவருக்கத்தக்க நிலை ஏற்பட்டு உள்ளது.

வீட்டின் உட்புறம் மட்டுமன்றி, வாசலில் நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மீதும் ஈக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்து வருகின்றன. இதன் காரணமாக வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாமலும், அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்ற முடியாமலும் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

​மேலும், ஈக்களின் இந்தத் தீவிரப் பெருக்கத்தால் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்குக் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வீடுகள் மற்றும் வாகனங்களில் ஈக்கள் மொய்க்கும் வீடியோ ஆதாரங்களுடன் ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்குக் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

​அதில், “சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்; ஈக்கள் பெருக்கத்திற்கு அருகில் உள்ள பண்ணைகள் அல்லது கழிவுகள் காரணமா ? என்பதை உடனடியாகக் கண்டறிந்து, கிருமிநாசினி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்,” என வலியுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!