தஞ்சாவூரில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கோ.சுகுமாறனை, போலீஸ் காவலில் 24 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் நெ.1 வல்லம் சாலையில் தனியார் மருத்துவமனையில் பங்குதாரர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையின் பங்குதாரர் சரவணன், நிர்வாகத் தலைவர் ஆர்.எம்.பாஸ்கரன், மேலாளர் பாஸ்கர் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப் பிரிவு உள்பட 3 பிரிவுகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் காவல் துறை அதிகாரி ஒருவர் ரூ.5 கோடி வாங்கியதாகவும், ஆனாலும் காவல் துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து தங்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழக டிஜிபியிடம் சரவணன் மனு அளித்தார். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டில் கடந்த அக்.9ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுகுமாறனை அக்.10-ம் தேதி தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நேரில் பார்த்து, விசாரணை நடத்தி அக்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சுகுமாறனை கடந்த 12-ம் தேதி பணியிடைநீக்கம் செய்து, தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிபிசிஐடி வழக்குகள் விசாரிக்கப்படும் திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் சுகுமாறன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 16-ம் தேதி நடுவர் எஸ்.ஆக்னஸ் ஜெப கிருபா விசாரித்து தள்ளுபடி செய்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த சுகுமாறன் தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், நேற்று திருவையாறு நீதிமன்றத்தில் சுகுமாறனை போலீஸார் ஒப்படைத்தனர். அப்போது, சுகுமாறனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 2 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர், ஆனால் 24 மணி நேரம் மட்டுமே போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
