பேரளம் ரயில் நிலையம் அருகே 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளுடன் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முடிகொண்டான் மற்றும் நன்னிலம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 65,000 மெட்ரிக் டன் நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 52,000 மெட்ரிக் டன் நெல் ஏற்கனவே சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட பேரளம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேக்கமடைந்திருந்த நெல் மூட்டைகளைச் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பக் கோரி, கடந்த சில தினங்களாகப் பல்வேறு மனு கொடுக்கும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பாக ஊழியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், திறந்தவெளியில் இருந்த நெல் மூட்டைகள் உடனடியாக லாரிகள் மற்றும் ரயில்கள் மூலமாக அருகில் உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
