தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களின் கூலியை சரிவர தராமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்தும், தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரை
கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தைமுற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில இணை செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். 12.7.2025க்கு முன் தேதியிட்டு நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயர்வை வழங்க வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும். 2022ம் ஆண்டு முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும். ஆதார் இணைப்பில் நிர்வாகம் செய்த தவறுகளை நிர்வாகமே சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாவட்ட தலைவர் ரங்கசாமி பொருளாளர் தர்மராஜ் உள்ளிட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சரவணன் கூறினார்.
இதற்கிடையில்அனுமதி இன்றி முற்றுகை போராட்டம் நடத்திய காரணத்தால் போலீசார் சுமை தூக்கும் தொழிலாளர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்
