புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் அருகே ஆயுள் தண்டனைக் கைதியை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரப் பெட்டிக்கடை மற்றும் வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆயுள் தண்டனைக் கைதி உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரோஸ்கான். இவர் ஆயுள் தண்டனைக் கைதியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது தாயார் அஸ்மா (வயது முதிர்வு காரணமாக) நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ப்ரோஸ்கானை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கோட்டைப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர், அவரை மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக நான்கு காவலர்கள் மற்றும் ஒரு வாகன ஓட்டுநர் என மொத்தம் ஐந்து பேர் காவல்துறை வாகனத்தில் பயணித்துள்ளனர்.
அப்போது, அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் முத்துப்பட்டினம் பகுதியில் காவல்துறை வாகனம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த ராஜ்கபூருக்குச் சொந்தமான பெட்டிக்கடையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகிலிருந்த சிவசாமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் பக்கவாட்டுச் சுவரிலும் மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் காவல்துறை வாகனத்தில் பயணித்த ஆயுள் தண்டனைக் கைதி ப்ரோஸ்கான், நான்கு காவலர்கள் மற்றும் ஓட்டுநர் என மொத்தம் ஆறு பேர் காயமடைந்ததாகத் தெரியவருகிறது. இருப்பினும், கிடைத்த தகவலின்படி, காயமடைந்த ஐந்து பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காவல்துறை வாகனம் மோதியதில் ராஜ்கபூருக்குச் சொந்தமான பெட்டிக்கடை முழுமையாகச் சேதமடைந்தது. அதேபோல், சிவசாமியின் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாகக் கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான காவல்துறை வாகனத்தை அதிகாலை நேரத்தில் காவல்துறையினர் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுள் தண்டனைக் கைதியை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் முத்துப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
