Skip to content
Home » ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 50 பேருக்கு கறவை மாடு வாங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 25 லட்சம் கடனுதவியும், உத்தம நாயக்கனூரில் உள்ள உறுப்பினர்கள் 25 பேருக்கு கறவை மாடு வாங்க கடனாக ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரமும், கோட்ட நத்தம்பட்டி பகுதியில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 26 பேருக்கு ரூ.13 லட்சமும் வழங்கினார்.

வீரபெருமாள்பட்டி சங்கத்திற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், தாட்கோ நிதி திட்டத்தில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரமும், பராமரிப்பு கடன் உதவியாக 31 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் 135 நபர்களுக்கு ரூ.57 லட்சத்து 94 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்படும். ஆவின் ஐஸ்கிரீமுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. 10 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையும் வரும் காலங்களில் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். பால் உற்பத்தி விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளின் பராமரிப்பு செலவு, அந்த மாடுகளுக்கு நோய் வந்தால் அதனை தடுக்க நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டி இருக்கிறோம்.

முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது. ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே அமுல் நிறுவனம் வருவதினால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, ஆவின் தலைமை இயக்குனர் வினித், மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அக்ரி.கணேசன், செல்லத்துரை, ஆனந்த், புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!