கரூர் அருகே அரசு பேருந்தும் பொக்லின் இயந்திரமும் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு; அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
கரூர் – திருச்சி சாலையில் உள்ள திருமாநிலையூர் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு பொக்லின் இயந்திரத்தை, அதன் ஓட்டுநர் அசோக் ஹாரன் அடித்தபடி சாலைக்கு வெளியே எடுத்துள்ளார்.
அப்போது திருப்பூரில் இருந்து கரூர் வழியாக திருவாரூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து அந்த வழியாக வேகமாக வந்துள்ளது. எதிர்பாராத விதமாக பெட்ரோல் பங்கில் இருந்து பொக்லின் இயந்திரம் சாலைக்கு வந்தபோது, அரசு பேருந்தின் முன்பகுதியில் அதன் கொக்கி மோதியது.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பொக்லின் இயந்திரம் சாலையோரம் கவிழ்ந்தது. மேலும், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது.
இதையடுத்து பேருந்தை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், அதிலிருந்த பயணிகளைப் பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தான்தோன்றிமலை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பெட்ரோல் பங்கில் இருந்து பொக்லின் இயந்திரம் வெளியே வரும்போது அரசு பேருந்து மீது மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பெட்ரோல் பங்க் அமைந்துள்ள சாலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் , விபத்துகளைத் தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
