அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தின் மற்ற மூன்று தொகுதிகளான அரவக்குறிச்சி, குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களிலும் அதிமுகவே நேரடியாகக் களம் காணும் என்பது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக, கடந்த 2021 தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதி அல்லது குளித்தலை ஆகிய இரண்டில் ஒன்றை எதிர்பார்த்திருந்த பாஜகவினருக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதோடு, அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, “2021 தேர்தலில் அதிமுக எங்களுக்கு என்ன மரியாதை தந்ததோ, அதே மரியாதையை இந்தத் தேர்தலில் நாங்கள் திருப்பித் தருவோம்” என்ற வாசகம் சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் கரூரில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

