தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறி விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சை தலைமைத் தபால் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு உர விலை உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழக அரசு கூட்டுறவு பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிர் கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்குப் பயனில்லை என்றும், தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பயிர் கடனை நிலத்தின் அடிப்படையில் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். விவசாயிகளுக்குப் புதிய பயிர் கடன்களை வழங்குவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மாசிலாமணி, மாவட்டச் செயலாளர்கள் கண்ணன், பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
