பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியாவார். போலீஸ் காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் பேரில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்வத்தாமனின் தந்தையான ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் மொபைல் போனை ஆய்வு செய்தபோது சிறையில் இருந்தபடி ரவுடி நாகேந்திரன் அவரிடம் பேசியது தெரியவந்தது. நிலப்பிரச்சனை தொடர்பாக தன் மகனிடம் ஆம்ஸ்ட்ராங் மோதியதால், சிறையில் இருந்தபடி, ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துப்பாக்கி முனையில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமன் கைதானார். இதனால காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.