Skip to content
Home » தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபரப்பு..

தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா.. ஆந்திர சட்டசபையில் பரபரப்பு..

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர சட்டசபை இன்று கூடியபோது சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகில் சென்று பேப்பர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சபாநாயகர் மீது வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார். ஆதாரம் இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்து இருக்கிறீர்கள். முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபைக்கு வந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும் என பேசினார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எதிர் கோஷமிட்டனர். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம் பாபு எழுந்து இதுபோன்ற செயல்களை சினிமா நடிப்பதில் வைத்துக்கொள்ளுங்கள். சட்டசபைக்குள் இது போன்று நடந்து கொள்ளக்கூடாது என தெரிவித்தார். இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா தில் இருந்தால் இந்த பக்கம் வா என ஆவேசமாக கத்தினார். அதற்கு அம்பதி ராம்பாபு உனக்கு தில் இருந்தால் இந்த பக்கம் வா என மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!