Skip to content
Home » தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலையம்மாள் சிலை….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலையம்மாள் சிலை….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார். அஞ்சலை அம்மாள் சிறுவயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக திகழ்ந்தார். 1921-ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது அதில் கலந்துகொண்டு அஞ்சலை அம்மாள் தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்.

சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேய படைத்தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940-ம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிறை தண்டனை பெற்றார்.  அஞ்சலையம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காக தியாகம் செய்தார்.

“தென்னாட்டின் ஜான்சி ராணி” என்று மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர். இத்தகைய சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் நினைவைப் போற்றுகின்ற வகையில், கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடலூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அஞ்சலையம்மாள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் துரைமுருகன்,  கணேசன், உதயநிதி,  தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!