Skip to content
Home » திருச்சி அதிமுகவில் மூக்கை நுழைக்கும்”மாஜி” … சுப்புனி சொல்லும் அரசியல்

திருச்சி அதிமுகவில் மூக்கை நுழைக்கும்”மாஜி” … சுப்புனி சொல்லும் அரசியல்

நன்றி- அரசியல் அடையாளம் 

“சுப்புனி முன்பு எப்போதும் அனுபவிக்காத கொடுமை இது” என்று வியர்வை துளிகள் ததும்ப புலம்பியபடியே சுப்புனி காபி கடைக்கு வந்தார் காஜா பாய். “என்ன பாய் வெயில் கொடுமையா?” என்று ஏற்கனவே வந்து காத்திருந்த பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் கேட்க வேதனையில் ஆமாம் என்று தலையை கூட ஆட்டாமல், “இப்படி வெப்ப அலை வீசுவதை எப்போதும் பார்த்ததில்லை. எங்காவது குளிர் பிரதேசத்துக்கு சென்றால் பரவாயில்லை என தோன்றுகிறது” என காஜா பாய் கூற, “முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் அமைச்சர் உதயநிதியும் ஓய்வு எடுத்தது மாதிரியா?” என்று நக்கலாக சசாயம் கேட்டார்.
மேலும் அவரே தொடர்ந்து “முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று 5 நாள் ஓய்வு எடுத்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் சென்னை திரும்பினார். அதேபோல் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் சென்று ஓய்வு எடுத்து வருகிறார்” என்றார்.
“திடீரென எடப்பாடி பழனிசாமி மாயமாகி விட்டாராமே, அதுபற்றி எதுவும் கேள்விப்பட்டீரா?” என காஜா பாய் கேட்க, “ம்ம்ம் தெரியும்” என்று ஆரம்பித்தார் சகாயம். “எடப்பாடி மாயமெல்லாம் ஆகவில்லை. முழங்கால் வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா சென்றிருந்தார். அங்கு 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டு சேலம் திரும்பி உள்ளார். உடன் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து செல்லாததால் பரபரப்பாகி இவ்வாறு வதந்தி பரவி விட்டது. சேலம் திரும்பியதும், இதை பழனிசாமியே பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவும் பெங்களூரு சென்று சில நாட்கள் தங்கி முழங்கால் வலிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பி உள்ளார்” என்றார் சகாயம்.
அடுத்ததாக ஒரு முன்னாள் அமைச்சரால் திருச்சி அதிமுகவில் புகைச்சல் கிளம்பி இருக்கும் கதையை சொல்ல ஆரம்பித்தார் காஜா பாய். “புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். சமீபத்தில் சாரதாஸ் ஜவுளி நிறுவன உரிமையாளர் மணவாளன் திருச்சியில் மறைந்தார். அவரது உடலுக்கு விஜயபாஸ்கர் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் தன்னுடன் திருச்சி மாவட்ட ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன், இவரது தம்பியும் திருச்சி மாநகராட்சி 14வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான அரவிந்தையும் அழைத்து வந்திருந்தார். சாரதாஸ் உரிமையாளரின் வீடு இருக்கும் பகுதி 14வது வார்டை சேர்ந்தது.
மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் சீனிவாசன். அன்றைய தினம் அவர் உள்ளூரில் தான் இருக்கிறார். ஆனால் அவரை விஜயபாஸ்கர் அழைத்து வரவில்லை. ஏற்கனவே திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கருப்பையாவும், விஜயபாஸ்கரின் சாய்ஸ் தான். இத்தனைக்கும் திருச்சி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி.  லோக்சபா தேர்தலுக்கு திருச்சிக்கு வந்தார் விஜயபாஸ்கர், தேர்தல் முடிந்த பிறகும் தனது அரசியலை தொடர்கிறார் விஜயபாஸ்கர் என புலம்புகிறாராம் மாநகர் மாவட்ட செயலாளர்.. ”  என்று காஜா பாய் சொல்லி முடித்தார்.
“3ம் கட்ட தேர்தல் கள நிலவரம் எப்படி உள்ளது?” என்று அடுத்த கேள்வியை எடுத்து விட்டார் பார்த்தா. “பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நல்ல படியாக முடிந்துள்ளது. ஆனால் 3ம் கட்ட பிரசாரத்தில் 2 பாலியல் புகார்கள் பாஜகவை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கின. ஒன்று, மேற்கு வங்க கவர்னர் மீதான பாலியல் புகார். பின்னால் வந்து கவர்னர் என்னை கட்டிப்பிடித்தார் என கவர்னர் மாளிகை பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பம் மீது எழுந்தது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமாக ரேவண்ணா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணாவின் மகன் தேடப்படுகிறார். இந்த இரு விவகாரங்களும் பாஜகவுக்கு தலைவலியாக மாறி உள்ளன. இது தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் “என்று காஜா பாய் கூறி முடிக்க காபி கடை பெஞ்ச் காலியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!