மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளவான 120 அடி எட்டியதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையிலிருந்து படிப்படியாக உபரிநீர் திறந்துவிடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு, 01.08.2024 அன்று மாலை 4.00 மணிக்கு 1,70,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதையும் தொடர்ந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் இன்று (02.08.2024) காலை 8.00 மணி அளவில் சுமார் 1,50,000 கனஅடி உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் “செல்பி” (selfie) எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப்
பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு, விடுதலையும் மற்றும் நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
ஆடிபெருக்கு திருவிழாவின்போது கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் நீராட வேண்டும்.
பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும். வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல்/புகார் தெரிவித்திட மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.