Skip to content
Home » அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அரசு செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மேலப்பழுவூர் ஊராட்சி, கீழையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் கீழப்பழுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்ததுடன் மாணவர்களிடம் உணவின் சுவை, தினசரி வழங்கப்படும் உணவின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தினையும் பார்வையிட்டு உணவுப் பொருட்களின் காலாவதி தேதியினை தினசரி உணவு தயாரிக்கும் முன் சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு போதுமான அளவில் உணவினை வழங்கவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, வாலாஜாநகரம் ஊராட்சி பொது விநியோக திட்ட நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட், அமராவதி 2- நியாய விலைக்கடை மற்றும் அமராவதி -1 நியாய விலைக்கடை ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்ததுடன்,

பொதுமக்களுக்கு வழங்கபட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் எண்ணிக்கை, பொருள் இருப்புப் பதிவேடு, பொருள் விநியோகப் பதிவேடு, மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, வரவு, இருப்பு, விற்பனை குறித்த விவரங்கள், விற்பனைப் புத்தகம், நியாய விலைக்கடை திறக்கும் நேரம், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

முன்னதாக,  அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்து, அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடிப்பதுடன் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்று சேருவதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் மண்;டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், மாவட்ட நிலை அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!