Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்- மூன்றடுக்கு பாதுகாப்பில் EVM…24 மணி நேரமும் கண்காணிப்பு

அரியலூர் மாவட்டம், வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுப்பட்ட 650 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைப்பறைகளில் வைக்கப்பட்டு

வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில், 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரியங்கா சிங்லா, 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் கைலாஷ் வான்கடே அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் இன்று (24.04.2026) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு கையெழுத்திட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 23.04.2026 அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 330 வாக்குச்சாவடிகள் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 320 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் பூட்டிசீல் வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு துணை இராணுவத்தினர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியோர்கள் மூலம் செயல்படுத்தப்படும் சுழற்சி முறை பாதுகாப்பு குறித்தும் பார்வையிட்டு கேட்டறிந்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு பதிவேட்டில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கையெழுத்திட்டார்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பாதுகாப்பு படையினர் (CAPF) -15, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் (TSP) -36, ஆயுதப்படை / சட்டம் மற்றும் ஒழுங்கு (L&O) -192, ஊர்காவல் படையினர் -4 என மொத்தம் 247 நபர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று வாக்கு எண்ணும் மையத்தில், Web Camera-க்கள் ஒவ்வொரு இருப்பு அறைக்கும், வாக்கு எண்ணும் மையத்தின் உட்புற பகுதிகளிலும், வெளிப்புறங்களிலும் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தீயணைப்பு வாகனம், மின் விளக்குகள் (Focus lights), உரிய ஜெனரேட்டர் வசதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் நான்கு புறங்களிலும் உயர் கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணித்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழச்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி.சித்ரா, வட்டாட்சியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்…

பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைத்து சீல் இடும்பொழுது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, மாவட்ட கலெக்டர் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் சீல் வைப்பது நடைமுறை ஆகும். ஆனால் இன்று அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்ட பொழுது மாவட்ட கலெக்டரும் அந்த இடத்தில் இல்லை. செய்தியாளர்களுக்கும் தகவல் இல்லை.
பின்னர் எப்பொழுதும் நடைமுறையில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளை தினந்தோறும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பதிவேடுகளில் கையொப்பமிட்டு செல்லும் நடைமுறையின்படி அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து பதிவேட்டில் கையொப்பமிட்டு சென்றுள்ளார். இச்செயல் செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று தேர்தல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மாவட்ட கலெக்டர் தேர்தல் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு எதையும் நடத்தவில்லை என்பதும், தேர்தல் சம்பந்தமான அனைத்தும் செய்தி குறிப்புகளாக மட்டுமே வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!