கரூரில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – குற்றவாளியை கைது செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல்.
கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற காசோலை மோசடி வழக்கு தொடர்பாக, நீதிமன்ற வளாகத்தில் மோசடி வழக்கில் தொடர்புடைய சத்தியசீலன் என்பவருக்கும், எதிர்தரப்பு வழக்கறிஞர் நடேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இரவு சத்தியசீலன், 80 அடி சாலையில் உள்ள வழக்கறிஞர் நடேசனின் அலுவலகத்திற்குச் சென்று அவரை சரமாரியாக தாக்கியதுடன், கல்லால் தலையில்

தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் நடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர்

அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட சத்தியசீலனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
