Skip to content
Home » 2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

  • by Senthil

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. இதில் இரு அவை எம்.பிக்களும் பங்கேற்றனர். மரபுபடி இந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றி  கூட்டத்தை தொடங்கி வைத்தார். ஜனாதிபதி முர்மு புதிய நாடாளுமன்றத்திற்கு  இன்று தான் முதன் முறையாக வந்து உள்ளார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒரே பாரதம், உன்னத பாரதம். நாட்டின் பல இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணால் உருவானது இந்த நாடாளுமன்றம்.   புதிய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் நாகரீகம், பண்பாடு உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.   புதிய நாடாளுமன்றத்தில்  அர்த்தமுள்ள , ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்.  நமது மரபுகளை  காப்போம்.கடந்த ஆண்டு பல வரலாற்று சாதனைகளை இந்தியா படைத்து உள்ளது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது பெருமிதத்திற்குரியது.  வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட 5வது நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. விண்வெளி உள்பட அனைத்து  துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது.  சாதனைகளின் ஆண்டாக 2023 அமைந்தது.  செல்போன் உற்பத்தியில் உலகின் 2வது பெரிய நாடு இந்தியா.  இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து 2 ஆண்டுகளாக 7.5 % மாக உள்ளது.  முத்தலாக்கிற்கு எதிராக நமது நாடாளுமன்றம் கடுமையான சட்டம் இயற்றி உள்ளது.

அறிவிக்கப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த  இந்தியா  நடவடிக்கை எடுத்து வருகிறது.  எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் இந்தியா தொடர்ந்து முன்னேறிவருகிறது.  புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  பட்ஜெட் கூட்டம் நடப்பது மகிழ்ச்சி. பல சர்வதேச போட்டிகளில் இந்தியா சாதனை படைத்துள்ளது.  15 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.  1 லட்சத்திற்கும் அதிகமான தொழில் முனைவோர் உருவாகி உள்ளனர்.இவ்வாறு அவர் பேசி வருகிறார். இந்தியாவின் 4 தூண்களையும் வலுப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  பெண்கள், ஏழைகள், மாணவர்கள், விவசாயிகளே இந்த நாட்டின் தூண்கள்.  கிராமங்களில் ஆயுஷ்மான் பாரத்  திட்டத்தால்  3 கோடி ஏழை மக்கள்  பயன்பெற்றுள்ளனர். கொரோனாவில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டது.  80 கோடி மக்களுக்கு  ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  பணவீக்கம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கும் விமான பயணம் சாத்தியமாகி உள்ளது.  தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 1. 46 லட்சம் கி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது.  உலக டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 % அதிகரித்துள்ளது.

கிராமங்களில் 4 லட்சம் கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.   வருடத்திற்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே துறையை முழுவதும் மின்மயமாக்கும் பணி விரைவில் நிறைவு பெறும்.  ஏழைப்பெண்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.  விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச விலை 2.5 % அதிகரித்துள்ளது.  விவசாய கடன் பெறும் நடைமுறை  எளிதாக்கப்பட்டுள்ளது.  முப்படைகளிலும் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  11 கோடி மக்களுக்கு தூய்மையான  குழாய் குடிநீர் விநியோகம் செயயப்படுகிறது.  பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கும் 4 ஜி சேவை அளிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி  வழங்கப்பட்டுள்ளது.  கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்த தனித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் உரையாற்றினார். மொத்தம் 1 மணி நேரம் 15 நிமிடம் பேசினார். நாளை காலை  நிதிமந்திரி நிர்மலா சீத்தாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!