உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம்ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைக்க உள்ளனர். ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு வருகிறார். 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர். கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும். 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர்மோடி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். குழந்தை ராமரை வழிபட பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

நாடு முழுவதும் இருந்து மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறையை சேர்ந்த பிரபலங்கள் நேற்று முதல் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். இன்றும் 100 தனியார் விமானங்களில் சிறப்பு விருந்தினர்கள் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளனர். அயோத்தியில் ஒரே நேரத்தில் 100 விமானங்களை நிறுத்த முடியாது என்பதால், சிறப்புவிருந்தினர்கள் வரும் விமானங்கள் அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நேற்று லக்னோ விமான நிலையம் வந்தார்.அவர் இன்று காலை லக்னோவில் இருந்து அயோத்திக்கு காரில் செல்கிறார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நேற்று விமானங்கள் மூலம் லக்னோவுக்கு வந்தனர். அவர்கள் லக்னோவில் இருந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




