Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய்க்கு பீட்டா நோட்டீஸ்: பிரச்சார புறாவால் எழுந்த புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் தனது பிரசார வாகனத்தின் மீது ஏறி நின்றவாறு ரோடு ஷோ நடத்தினார். அப்போது தொண்டர் கொடுத்த வெள்ளைப் புறா ஒன்றை விஜய் பறக்கவிட்டார். அந்த புறாவின் இறக்கைகளில் த.வெ.க. கொடியின் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரசாரத்தின்போது புறாவை பறக்கவிட்டது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா இந்தியா’ த.வெ.க. தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆலோசனையை பீட்டா அமைப்பு மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புறாக்கள் அதிக உணர்திறன் கொண்டவை என்றும், வண்ணம் பூசுதல், அடைத்து வைத்தல் மற்றும் கூட்டங்களுக்கு மத்தியில் திடீரென விடுவித்தல் போன்ற செயல்கள் புறாக்களுக்கு கடுமையான மன அழுத்தம், குழப்பம் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தகைய செயல்கள், விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டம், 1960-ஐ மீறக்கூடும் என பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதோடு, த.வெ.க. தலைவர் விஜய் தன்னிடம் பறவைகள் மீதம் இருந்தால் அவற்றை மறுவாழ்வுக்காக ஒப்படைக்க வேண்டும் எனவும், பிரசார நடவடிக்கைகளில் விலங்குகளை பயன்படுத்துவதை தடைசெய்யும் தெளிவான கொள்கையை த.வெ.க. கட்சிக்குள் நிறுவ வேண்டும் எனவும் பீட்டா அமைப்பு தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ‘பீட்டா இந்தியா’ அமைப்பின் சட்ட ஆலோசகர் விக்ரம் சந்திரவன்ஷி கூறுகையில், “விலங்குகளுக்கு அரசியல் சார்பு இல்லை. அவற்றின் நல்வாழ்வு பெரும்பாலும் நமது இரக்கத்தையும், கருணையையும் சார்ந்துள்ளது. உயிருள்ள பறவைகளை காட்சிப் பொருட்களாக பயன்படுத்துவது, அவற்றுக்கு வண்ணம் தீட்டுவது மற்றும் இரைச்சல் மிகுந்த சூழல்களில் பறக்க விடுவது அவற்றை அச்சமடையச் செய்யலாம், காயப்படுத்தலாம் அல்லது நோய்வாய்ப்படச் செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!