சரபோஜிராஜபுரத்தில் பெண்கள் போராட்டத்தால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்ட மதுபான கடை. தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கும்மி அடித்தும் ஆட்டம் கொண்டாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா நெடுந்தெரு ரெகுநாதபுரம், சரபோஜிராஜபுரம் கிராமங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.குறிப்பாக இந்த கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது.
இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இதனால் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் கல்லூரி அருகே அமைந்துள்ள மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பாபநாசம் வட்டாச்சியர் சந்தனவேல் தலைமையில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஆண்டுகளாக இயங்கி வந்த மதுபான கடையை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நெடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடை முன்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, திருவிழா போல் கும்மி அடித்து கொண்டாடி தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
