அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கட்சி நிகழ்வுகள்?
தவெக நிர்வாகி மீது நடவடிக்கை கோரிக்கை
ஈரோடு மாவட்டம், தாளவாடி:
தாளவாடி பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்குள் சென்று, அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கட்சி சார்ந்த ஆலோசனைகள் வழங்குவது போன்று செயல்படுவதுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதாக தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் சையது அஜ்மல் மீது புகார் எழுந்துள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு

பள்ளிகளில் அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் சூழலில், கட்சி நிர்வாகி ஒருவர் சென்று அரசுப் பணியாளர்களிடம் ஆலோசனை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சூழலில் இடையூறு ஏற்படுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறுவது தொடர்பாக கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் புகார்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, தவெக கட்சியின் தலைமை இது குறித்து உரிய விசாரணை நடத்தி, கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
