Skip to content
Home » பிரியாணியில் வெட்டுக்கிளி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….. பரபரப்பு…

பிரியாணியில் வெட்டுக்கிளி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….. பரபரப்பு…

  • by Senthil

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் 4 ரோடு அருகே கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாஸ்ட்புட் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு பரமத்தியைச் சேர்ந்த டேவிட் (35) என்பவர் தனது வீட்டிற்கு சிக்கன் பிரியாணியை பார்சல் செய்து வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரியாணியை பிரித்து சாப்பிட முயன்ற போது அதில் வெட்டுக்கிளி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக பரமத்திவேலூரில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு சென்று தான் வாங்கி சென்ற பிரியாணியில் வெட்டுக்கிளி இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரியாணி கடை உரிமையாளர் நீங்களாக வெட்டுக்கிளியை பிரியாணியில் போட்டு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டேவிட் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேசி வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி பார்சலை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் நீங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி அதை சோதனை செய்யுங்கள் என அறிவுறுத்தினர். இதுகுறித்து பிரியாணி கடையில் இருந்த வாடிக்கையாளர் கூறியதாவது:- பிரியாணியில் கிடந்த வெட்டுக்கிளி நன்றாக பிரியாணியில்தான் வெந்துள்ளது தெரிகிறது. சமைக்கும் அடுப்பிற்கு மேலே அதிக வெளிச்சம் கொண்ட எல்.இ.டி., பல்புகளை உபயோகிப்பதால் அதிக வெளிச்சத்தில் அங்கு வரும் பூச்சிகள், வெட்டுக்கிளிகள், மற்றும் பூச்சிகள் விழுந்தாலும் இவர்கள் அதை கவனத்தில் கொள்வதில்லை. சாலைகளின் ஓரத்திலேயே அடுப்புகள் அமைத்து சமைப்பதால் ரோட்டில் செல்லும் வாகனங்களில் இருந்து வரும் மாசுக்கள் நிறைந்த புகை, தூசுகள், புழுதி, உணவுகளில் கலக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!