Skip to content
Home » பி.எப். கணக்கு…. பிறப்பு சான்றுக்கு இனி ஆதார் ஏற்கப்படாது

பி.எப். கணக்கு…. பிறப்பு சான்றுக்கு இனி ஆதார் ஏற்கப்படாது

  • by Senthil

இந்தியாவில் மத்திய-மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடிப்படையாக உள்ளது. பிறந்த தேதி உள்ளிட்ட சில சான்றுகளுக்கும் ஆதார் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) கணக்குகளில் இனி பிறப்பு சான்று ஆவணமாக ஆதார் ஏற்கப்படாது. பிறந்த தேதியை உறுதி செய்வதற்கு சமர்ப்பிக்கப்படும் ஆவண பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.

இதை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மண்டல அலுவலகங்கள், வருங்கால வைப்பு நிதி ஆணையர்கள் (பிராந்திய அலுவலகங்கள்) மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் நீக்கப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிஎப் கணக்குகளுக்கான மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களின் பிறந்த தேதியை உறுதி செய்வதற்கான ஆதாரமாக ஆதார் கருதப்படுவதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கவனித்தது. அத்துடன், ஆதார் என்பது ஒரு தனித்துவமான அடையாளமாக இருந்தாலும் ஆதார் சட்டம், 2016-ன் படி, பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, ஆதார் என்பது பிறப்பு சான்று அல்ல. அடையாள சரிபார்ப்பை மட்டுமே ஆதார் வழங்குகிறது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!