Skip to content
Home » தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

தேர்தல் ஜூரம்……..தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திராவில் கூட்டணிக்கு வலைவீசும் பாஜக……

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.  மீண்டும் ஆட்சி்யை பிடிப்போம் என பாஜககூறிவந்தாலும், அந்த கட்சிக்கும் தேர்தல் ஜூரம் வந்து விட்டது. இதனால் ஒவ்வொரு  மாநிலமாக பிரதான கட்சிகளுக்கு அன்பு அழைப்பு, அதிகார அழைப்பு, மறைமுக மிரட்டல் என பல வகைகளில் அழைப்பு விடுத்து வருகிறது.

அந்த வகையில் தான் அதிமுகவுக்கு கதவு திறந்திருக்கு என  அழைப்பு விடுத்தது. ஆனால் அதிமுகவோ, கதவை மூடிக்கோ என கூறிவிட்டது. இப்போது  ஆந்திராவிலும்  பாஜக  சில சீட்டுகளை பிடிக்க காய் நகர்த்தி வருகிறது. அங்கு பாஜக  பலவீனமாகவே உள்ளது. எனவே  ஆந்திராவில் புதிய கூட்டணிக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது பாஜக.

ஆந்திராவில் ஜெகன்மோகன்  ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.  ஜெகன் மத்திய அரசை பகைக்கவும் இல்லை. அதே நேரத்தில் அணைத்து அன்பு பாராட்டவும் இல்லை.  பாஜகவை தொலைவில் வைத்து தான் பார்க்கிறார். எனவே  அவர் கேட்ட தொகுதிகளை தரமாட்டார் என்பதை அறிந்து கொண்ட பாஜக தலைவர்கள், வெள்ளத்தில் கொழு கொம்பின்றி தவிக்கும் நிலையில் உள்ள முன்னாள் முதல்வர் சந்தி்ரபாபு நாயுடுவை நாடியது.

அவர் ஏற்கனவே  ஜெகன்மோகன்  ரெட்டியால் சிறைக்கு அனுப்பபட்டு படாதபாடு பட்டு உள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு  பேச முன்வந்ததால் நாயுடு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.  இதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தவர் போல  உடனடியாக  பாஜக இழுத்த இழுப்புக்கு செல்ல  ஆரம்பித்து விட்டார்.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு டில்லியில்  இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் இருந்தது. அந்த தேர்தலில் தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், பா.ஜனதா கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.

பின்னர் பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 3 -ல் மட்டுமே அந்த கட்சியால் வெற்றி பெற முடிந்தது. மீதியுள்ள 22 தொகுதிகளையும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. அத்துடன் சட்டசபை தேர்தலிலும் சந்திரபாபுநாயுடு தோல்வியுற்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியை பறிகொடுத்தார்.

புகழாரம் 25 தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் 49.89 சதவீத ஓட்டுகளையும், சந்திரபாபுநாயுடு 40.19 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர். 25 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜனதா ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பரிதாபமாக காட்சி அளித்தது. புதிய கட்சியான பவன்கல்யாணின் ஜனசேனா 5.87 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், ஜனசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு- அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும்  சேர்த்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில்  தெலுங்கு தேசத்துடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் பா.ஜனதா போதிய வலுவுடன் இல்லை. ஆகவே அங்கு மீண்டும் அகாலிதளத்துடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!