பெண் போலீசாரைப்பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது திருச்சி, கோவை, சேலம், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜர் படுத்த நேற்று சவுக்கு சங்கரை பெண் போலீசார் திருச்சி அழைத்து வந்து திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது திருச்சி போலீசார் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்தனர். பின்னர் நேற்று இரவு சவுக்கு சங்கரை லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். இன்று காலை லால்குடி சிறையில் இருந்து போலீசார் சவுக்கை அழைத்து வந்து திருச்சி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சவுக்கு சங்கரை போலீஸ் காவலுக்கு அனுப்பக்கூடாது. ஏற்கனவே அவருக்கு ஒரு கை ஒடிந்து உள்ளது. கஸ்டடி கொடுத்தால் இன்னொரு கையையும் உடைத்து விடுவார்கள். 1லட்சம் வழக்கு போடுவார்களா:? ஆவணங்கள், டிஸ்க்கள் எல்லாவற்றையும் கைப்பற்றி விட்டனர். இனி எதற்கு போலீஸ் கஸ்டடி, கோவையில் ஏற்கனவே கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்து விட்டனர். அதே தமிழ்நாடு போலீசார் மீண்டும் திருச்சியில் கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டுமா? ஒரு சம்பவத்துக்கு இத்தனை வழக்குகளா? என்றனர்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இது பெண் போலீசை பற்றி அவதூறாக பேசியதற்காக அல்ல. இவரது பேச்சால் ஒட்டுமொத்த பெண் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது இருதய ஆபரேசன் நடந்தது. அப்படி இருந்தபோதும் அவரை அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுப்பினர். எனவே இவரை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்ப வேண்டும். இவரது பேச்சில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை கண்டறியத்தான் கஸ்டடி கேட்கிறோம். இனி கஸ்டடி எடுத்து விசாரித்தால் தான் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தெரியவரும்.
இவ்வாறு கோர்ட்டில் காரசார விவாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து நீதிபதி ஜெயப்பிரதா, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கஸ்டடி குறித்து உத்தரவிடுகிறேன் என கூறினார்.
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை நேற்றும், இன்றும் திருச்சி பெண் போலீசாரே பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.