Skip to content
Home » நிர்மலா சீதாராமன் அறிக்கை… பாஜ நிலைப்பாடு குறித்து 3ம் தேதி அறிவிக்கிறார் அண்ணாமலை..

நிர்மலா சீதாராமன் அறிக்கை… பாஜ நிலைப்பாடு குறித்து 3ம் தேதி அறிவிக்கிறார் அண்ணாமலை..

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசிய சில தகவல்கள் அதிமுகவினர் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். இப்படியாக இரு கட்சியினருக்கும் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  அதே சமயம் அதிமுக கூட்டணி முறிவு குறித்து டில்லி மேலிடம் தான் பதில் சொல்லும் என அண்ணாமலை சமாளித்து வந்தார். டில்லி மேலிடமும் இதுவரை எந்த பதிலும் சொல்லாததால் தமிழக பாஜவினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.  இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னை வந்த நிர்மலா சீதாராமன், பாஜ நிர்வாகிகள் மட்டுமல்லாது, அதிமுகவினர் சிலரையும் சந்தித்தும் பேசியிருந்தார். இதன் அடிப்படையில் நிர்மலா சீத்தாராமன் அமித்ஷாவிடம் தனது அறிக்கையினை அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் தமிழக பாஜ முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழகத்தில் தாமரை மலரும் என்று டிவிட்டரில் பதிவிட்டார். இதனால் அதிமுகவின் கூட்டணி முறிவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டதோடு, தனி பாதையில் செல்வது என்று முடிவெடுத்துள்ளதற்கான அறிகுறி வெளியாகியுள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். மேலும் கூட்டணி குறித்த பாஜ தலைமையின் நிலைப்பாடு என்பது குறித்து அண்ணாமலைக்கும் தேசிய தலைமை சில தகவல்களை கூறியுள்ளது.  தமிழக பாஜவின் நிலைப்பாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி தகவல்களை தெரிவித்து விடுமாறு அண்ணாமலைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் பாஜ தலைவர் அண்ணாமலை வருகிற 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக கட்சியினரிடம் அண்ணாமலை கருத்து கேட்க உள்ளார். அன்றைய தினமே தமிழக பாஜவின் நிலைப்பாடு குறித்தும் அண்ணாமலை தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!