Skip to content
Home » 39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி  டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு அப்பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது. புரோட்டின் பவுடர் அவற்றில் முதலிடம் வகிக்கிறது. இது தவிரவும் உடற்பயிற்சி செய்பவர்கள் இதர ஊட்டங்களுக்காக, மருத்துவர் ஆலோசனையின்றி தாமாக எதையேனும் உட்கொள்ளும் போக்கும் அதிகம் நிலவுகிறது.
அறுவை சிகிச்சை
டில்லியில் பாடி பில்டராக விரும்பிய 26 வயது இளைஞர் ஒருவர் துத்தநாகம் சத்துக்காக விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கட்டழகு தேகத்துக்காக ஆசைப்பட்ட அந்த இளைஞருக்கு ஏனோ அது கைகூடவில்லை. இதனை அடுத்து எவரோ கூறியதன் அடிப்படையில் துத்தநாகம் சத்துக்குறைவினால் தனது உடல் தேறவில்லை என அந்த இளைஞர் முடிவுக்கு வந்தார். அடுத்த அதிரடியாக, நாணயத்தில் துத்தநாகத்தின் சேர்க்கை இருப்பதாக அறிந்து அவற்றை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பித்திருக்கிறார்.
இவ்வாறு 1, 2 மற்றும் 5 என ரூபாய் நாணங்களை சத்து மாத்திரை போல விழுங்கியிருக்கிறார். இதனை தனது வீட்டாரிடமும் தெரிவித்திருக்கிறார். அவர்கள் விளையாட்டாக அதனை கடந்திருக்கின்றனர். ஆனால் சில தினங்களில் வயிற்று வலி, வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே வயிற்றை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.
இளைஞர் குடலில் இருந்து மீட்கப்பட்ட காந்தங்கள், நாணயங்கள்
அங்கே வயிற்றை திறந்து பார்த்த மருத்துவர்களுக்கு தலை சுற்றியது. 39 காசுகள் மற்றும் 37 காந்தங்கள் குடலில் ஆங்காங்கே அடைத்து இருந்தன. தொடர்ந்து 7 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்த பிறகே இளைஞரின் உயிருக்கு உத்திரவாதம் கிடைத்தது. துத்தநாகம் சத்துக்காக நாணயங்களை விழுங்கியதாக இளைஞர் தெரிவித்ததை அவரது வீட்டார் அலட்சியப்படுத்தியதே, இந்தளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இதில் கூடுதலாக துண்டு காந்தங்களை அவர் விழுங்கியது எவர் கவனத்துக்கும் வரவே இல்லை. பாடி பில்டராகும் ஏக்கத்தில் அந்த வாலிபர்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள், அதற்கான கவுன்சலிங் மற்றும் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!