விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து சிறுவன் பரிதாப பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கே.ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் அபினேஷ் (7). இவன் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சிறுவன் அபினேஷ், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஒரு மர்மப் பாம்பு, எதிர்பாராத விதமாக அபினேஷை பலமாக கடித்தது. இதில் வலியால் அலறிய சிறுவனை குடும்பத்தினர் மீட்டு, உடனடியாக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவன் பரிந்துரைக்கப்பட்டான். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடித்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராவல் மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் தப்பி ஓட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புத்தாநத்தம் காவல் உதவி ஆய்வாளர் தானேஷ் மற்றும் போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்றை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரைக் கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, இருட்டில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இதையடுத்து போலீசார் அந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 3 யூனிட் கிராவல் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், மணல் கடத்தியவர் புத்தாநத்தம் அடுத்த வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய தர்மராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் வைத்து சூதாட்டம்: 10 பேர் அதிரடி கைது; சீட்டுகட்டுகள், ரொக்கப் பணம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஜீயாபுரம் மற்றும் முசிறி உட்கோட்ட பகுதிகளில் சூதாடிய 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஏரிக்கரையில் சூதாட்டம் – 6 பேர் கைது
ஜீயாபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் கே.கல்லிக்குடி ஏரிக்கரை பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை ஓரப் பகுதியில் ஒரு கும்பல் ரகசியமாக அமர்ந்து பணம் வைத்து சீட்டாடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை அதிரடியாக வளைத்துப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மணிகண்டத்தைச் சேர்ந்த குணசேகர் (25), ராகவேந்திரன் (27), கே.கல்லிக்குடியைச் சேர்ந்த யுவராஜ் (24), தனபால் (22), பிரிட்டோ பாபு (22) மற்றும் நாகமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (41) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு கட்டு சீட்டு மற்றும் சூதாட்டப் பணம் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.
காட்டுப்பகுதியில் சூதாடிய 4 பேர் சிக்கினர்
இதேபோல், முசிறி உட்கோட்டத்திற்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் மேலவளிகாடு பகுதியில் உள்ள முள் காட்டுப் பகுதியில் ரோந்துச் சென்றனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் காட்டுப்புத்தூர் அடுத்த கடுவெட்டி, மேலவளிகாடு பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (29), பெரியசாமி (26), பூவரசன் (29) மற்றும் மாணிக்கம் (30) என்பது தெரியவந்தது. கைதான அவர்களிடமிருந்து 2 சீட்டுகட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.310 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாவல்பட்டு அருகே புகையிலை விற்ற வாலிபர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவத்தன்று, நாவல்பட்டு காவல் நிலைய போலீசார் எம்.ஐ.இ.டி செக்போஸ்ட் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சட்டவிரோதமாக விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த திருவெறும்பூர் அடுத்த அய்யம்பட்டி, குடியான தெருவைச் சேர்ந்த பாலச்சந்தர் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
