பீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் மோதிஹரி நகரில் ராம்கார்வா கிராமத்தில் நாரிர்கீர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வந்தனர். செங்கல் சூளையின் புகைக்கூண்டு திடீரென நேற்று மாலை வெடித்து சிதறியது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் குழு மற்றும் மாநில பேரிடம் மீட்பு படையினர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும், வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என முதல் கட்ட தகவல் தெரிவித்தது. பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில், வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இதேபோன்று, பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.