Skip to content
Home » திருச்சியில்…..மணல் வண்டிகள் உருவாக்கும் போக்குவரத்து நெருக்கடி…. தீர்வு என்ன?

திருச்சியில்…..மணல் வண்டிகள் உருவாக்கும் போக்குவரத்து நெருக்கடி…. தீர்வு என்ன?

  • by Senthil

கட்டுமான பணிகளுக்கு காவிரி மணல் என்பது ஒரு வரப்பிரசாதம். காவிரி மணலுக்கு இந்தியா முழுவதும்  மவுசு உண்டு. கொள்ளிடம் ஆற்றில் இருந்து  மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுத்து விற்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில்  தாளக்குடி, மாதவப்பெருமாள் கோவில் ஆகிய 2 இடங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுத்து விற்பனை நடக்கிறது.

.

அதிகாலையிலேயே மாட்டு வண்டிகள்  கொள்ளிடம் சென்று வண்டிகளில் மணல் நிரப்பிக்கொண்டு  சாலைகளில் வருகிறது. மாட்டு வண்டிகளில் எவ்வளவு மணல் வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம் என்பதால் வண்டிக்காரர்கள், வண்டி நிரம்பி வழியும் வகையில், ஒற்றை மாடு இழுக்க முடியாத அளவுக்கு மணலை அம்பாரமாக குவித்து அள்ளி வருகிறார்கள்.

அடிக்கிற காற்றில்  மணல் காற்றோடு கலந்து சாலைகளில் செல்லும் மக்கள் கண்களில் மணலை கொட்டுகிறது. அத்துடன்  இந்த மாட்டு வண்டிகள் ஊர்ந்து தான் செல்ல முடிகிறது. இதனால் அனைத்து வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக  காலை வேளைகளில் பள்ளி,கல்லூரி, அலுவலகம் என மக்கள் வேகமாக இயங்கும் நேரத்தில் மாட்டு வண்டிகள் தடைகற்களை ஏற்படுத்துகிறது.இதுவே திருச்சி நகரின் போக்குவரத்து  நெரிசலுக்கு   முதல் காரணமாக அமைகிறது.

மணல் வண்டிகளால்    மற்ற வாகனங்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. ஒருசில மாட்டு வண்டிகள் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரகணக்கான மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் தாமதிக்க வேண்டி உள்ளது.

எனவே காலை 10 மணிக்கு பிறகு, மாலை 4 மணி வரை மட்டுமே மாட்டு வண்டிகள்  மெயின் சாலைகளில் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க வேண்டும். இந்த நேரத்தில் தங்களுக்கு வெயில் அதிகமாக இருக்கிறது என மாட்டு வண்டிக்காரர்கள் கூறுகிறார்கள்.  உங்கள் மீதும், மாடு மீதும் வெயில் படாமல் இருக்க ஒட்டு மொத்த மக்களும் தாமதிக்க வேண்டுமா என்பது பொதுமக்களின் கேள்வி?.

தற்போது கோடை கால வெயிலும் இல்லை. இதமான காற்றுடன் தான் வெயில் அடிக்கிறது. இந்த வெயில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்பதால் மாட்டு வண்டிகள் இயக்கத்தின் நேரத்தை மாற்றி அமைத்தால் தான் திருச்சி மாநகரின் போக்குவரத்தை சீரமைக்க முடியும். மக்கள் குறிப்பிட்ட நேரத்தில்  தங்கள் பணித்தலங்களுக்கு செல்ல முடியும். இதற்கு  மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் சேர்ந்து  ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.

காலை நேரத்தில் திருச்சி மாநகருக்கு  வெளியிடங்களில் இருந்து  லட்சகணக்கான மக்கள் வருகிறார்கள். 100 மாட்டு வண்டிக்காரர்கள் நலனை பார்க்காமல், பெரும்பான்மையான மக்களின் நலனும், பொதுநலனும் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மக்களின் கோரிக்கை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!