Skip to content
Home » வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?…. மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்…

வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா?…. மாதத்தவணை கேட்ட பைக் ஷோ ரூம் ஊழியர் மீது கொடூர தாக்குதல்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அண்ணா நகரில் தனியார் பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் சர்வீஸ் ஆகியவை செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஷோரூமில் பைக் வாங்குவதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடனுதவி வழங்கி வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் கடன் உதவியுடன் இருசக்கர வாகனங்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சித்தா என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தனியார் வங்கியின் உதவியுடன் பல்சர் பைக்கை வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களாக மாதத்தவணை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், ஷோரூமில் இருந்த ஊழியர்கள் சித்தாவின் வீட்டுக்கு சென்று மாதத்தவணையை செலுத்துமாறு கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சித்தா, தனது குடும்பத்தோடு ஷோ ரூமுக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த ஊழியர் இளங்கோ என்பவரை பார்த்து, “என் வீட்டிற்கு வந்து பணம் கேட்பாயா? என் வீட்டிற்கே வந்து பணம் கேட்பாயா? அந்தளவிற்கு உனக்கு தைரியம் உள்ளதா? இப்போது அடிக்கும் அடியில் இனிமேல் யார் வீட்டிற்கும் சென்று பணம் கேட்ககூடாது” என்று கூறியபடி சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மேலும், குடும்பமே சேர்ந்து இளங்கோவை சரமாரியாக தாக்கியுள்ளது. ஒருகட்டத்தில், சக ஊழியர்கள் வேடிக்கைப்பார்த்த நிலையில், வெளியே இருந்தவர்களும், பக்கத்து கடைக்காரர்களும் உள்ளே சென்று தாக்கியவர்களை விலக்கி விட்டனர்.
இதில் சித்தாவின் தாய், ஷோரூமில் இருந்த பிளாஸ்க்கை எடுத்து அடித்ததில், இளங்கோவனுக்கு தலையில் அடிபட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் விசாரணையை  துவங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!