கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கு விசாரணை நடத்த கவர்னர் ரவி அனுமதி அளித்து விட்டதாக அப்போது உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
பூத் கமிட்டி குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், நேற்று திடீரென முன்னாள் அமைச்சர்கள் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளித்ததாக தகவல் வெளியானதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்ததால், கவர்னர் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளாரா, இன்னும் 2 அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கவர்னர் தெரிவித்து உள்ளதால், அதிமுகவினர் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் இந்த பிரச்னை முக்கியமாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.