அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை முன்னிட்டு இந்திய அணியில் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அணித் தேர்வு குறித்து முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
“ரன் அடிக்கும் வீரரை நீக்குவது சரியல்ல”
செய்தியாளர்களிடம் பேசிய சிதான்ஷு கோடக், “வைபவ் சூர்யவன்ஷி மிகச் சிறந்த திறமை கொண்ட வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐபிஎல் போட்டிகளில் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்டுள்ளார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும்” என்றார்.
ஆனால், “அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் வீரரை அணியில் இருந்து நீக்குவது நியாயமல்ல. அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடினமான தேர்வு… நிர்வாகத்திற்கு தலைவலி
இந்திய டி20 அணியில் தற்போது பல இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இறுதி அணியை தேர்வு செய்வது கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளருக்கு மிகவும் சவாலான பணியாக உள்ளது.
கோடக் கூறுகையில், “இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் ஏற்கனவே அணிக்காக வெற்றிகளைப் பெற்றுத் தரும் வீரர்களை புறக்கணிக்க முடியாது. அதே நேரத்தில் புதிய திறமைகளுக்கும் சரியான நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.
வரலாறு படைக்க காத்திருக்கும் வைபவ்
வைபவ் சூர்யவன்ஷி இந்த தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் மிகவும் இளம் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அவரது அதிரடி ஆட்டம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது அறிமுகம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அணித் தேர்வில் அனுபவமும், தற்போதைய செயல்திறனும் முக்கிய பங்கு வகிக்கும் என இந்திய அணி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
