Skip to content
Home » ரூ.70லட்சம் சொகுசு கார்… டீக்கடையானது….. அள்ளுது வியாபாரம்

ரூ.70லட்சம் சொகுசு கார்… டீக்கடையானது….. அள்ளுது வியாபாரம்

 

புதிய முயற்சிகளுக்கும், புதுமைகளுக்கும், இந்த உலகம் எப்போதும் வரவேற்பு அளித்து வருகிறது.அதை நிரூபிக்கும் வகையில்  மும்பையில் ஒரு சொகுசு கார் டீக்கடை வியாபாரம் அமைந்துள்ளது.சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியை டீக்கடையாக்கிய  இரு இளைஞர்கள்  வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாண்டு சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் தான் நடக்கிறது.  சொகுசு காரில் கடை நடப்பதால் டீயின் விலை ரூ.20 என நிர்ணயிக்கவில்லை. டீயின் தரமும் நன்றாக இருக்கிறது என்கிறார்கள் அந்த சொகுசு கார் டீக்கடை வாடிக்கையாளர்கள்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி தாராவி. அதன் அருகே உள்ள அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில்  தான் இந்த டீக்கடை நடக்கிறது. இங்கும் தமிழர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.  இந்த டீக்கடை நடத்துபவர்கள் பெயர்  மன்னுசா்மா(அரியானாவை சேர்ந்தவர்) மற்றும் அமித் காஷ்யப்.

 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர். இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம்  நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, ‘டீ’யின் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர். அதற்கு ஏற்றார்போல் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர், “கடந்த 2 மாதங்களாக நான் இங்கு ‘டீ’ குடிக்க வருகிறேன். ஏனென்றால் அதன் சுவை அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அவர்களின் ‘டீ’யை வாங்கி குடிக்க விரும்புகிறேன்” என்கிறார்.

இந்த நூதன முயற்சி குறித்து மன்னு சர்மா கூறியதாவது:  நாங்கள் இரவில் ஒருநாள் ‘டீ’ குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் சொந்தமாக ‘டீ’ ஸ்டாலை திறக்க திட்டமிட்டோம். நாங்கள் சொகுசு காரில் டீ விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் டீ விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்து இருக்கிறோம்.

 சைக்கிளில் செல்பவர்களும்  எங்கள் கடையில் டீ குடிக்கிறார்கள். அதேபோல சொகுசு காரில் வருபவர்களும் எங்கள் ‘டீ’யை ருசிக்கிறார்கள். இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே ‘டீ’ தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம். பின்னர் சொகுசு காரில் டீ விற்பனை செய்ய தொடங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

டீக்கடை தொடங்குவதற்கு முன்  மன்னு சர்மா ஆப்பிரிக்க நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதேபோல அமித் காஷ்யப் காலையில் பங்கு சந்தை வர்த்தகராகவும் மாலையில் டீக் கடைக்காரராகவும் மாறியுள்ளார். இவர்கள் வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற டீக்கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!