Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விலை உயர்வால் கோவையில் அட்டைப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்

கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அவிநாசி சாலையில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் போர் பதற்றம் காரணமாக அட்டைப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக

தெரிவித்தனர். மேலும், மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அட்டைப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டன்னுக்கு சுமார் 8,000 ரூபாய் உயர்ந்துள்ளது என்றும் இதனால் உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்து, உற்பத்தியாளர்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக கூறினர். இந்த விலை உயர்வால் தொழில்துறையினர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதாகவும், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் தெரிவித்தனர். மேலும் வாடிக்கையாளர்களிடம் முழுமையான விலை உயர்வை நடைமுறைப்படுத்த முடியாததால் உற்பத்தியாளர்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகவும் கூறினர்.

காகிதம் கொள்முதல் செய்வதற்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அட்டைப்பெட்டிகளின் விற்பனைக்கு 5 சதவீத வரி மட்டுமே இருப்பதால், மீதமுள்ள 13 சதவீத உள்ளீட்டு வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் நிலவி அரசாங்கத்திடமே சேர்ந்து விடுகிறது என்று தெரிவித்தனர். எனவே, இந்த வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.

எனவே, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், வரி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழக தொழில்துறை அமைச்சரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாக தெரிவித்தனர். அரசாங்கம் தங்களை அழைத்து பேசி தீர்வு காணும் வரை வேலை நிறுத்தம் தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இல்லை என்றால் இந்த தொழிலை இழுத்து மூட வேண்டும் என்று வருத்தம் தெரிவித்தனர்.

error: Content is protected !!