தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதேநேரம் மதுரை நகரம், மதுரை விமானநிலையம், திருச்சி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை ஆகிய 5 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
