Skip to content
Home » சட்டீஸ்கர் தேர்தல்…… குண்டு வெடித்ததில் மத்திய போலீஸ் படுகாயம்

சட்டீஸ்கர் தேர்தல்…… குண்டு வெடித்ததில் மத்திய போலீஸ் படுகாயம்

  • by Senthil

மிசோரம்  மாநில சட்டமன்ற  தேர்தல் இன்று நடந்து வருகிறது.  40  தொகுதிகள் கொண்ட மிசோரமில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவ தொடங்கியது. அய்ஸ்வால் வடக்கு-2 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையம் ஒன்றில், மிசோரம் முதல்-மந்திரி ஜொராம்தங்கா தன்னுடைய வாக்கை செலுத்தினார். அதன்பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, என்னுடைய வாக்கை பதிவு செய்து விட்டேன். எனது தொகுதியின் பாதி பகுதிகளுக்கு சென்று வந்து விட்டேன். அரசை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய தொகுதியில் மிக பெரிய வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

மிசோரம் தேர்தலில்  101 வயது முதியவர் ருவால்னுடாலா மற்றும் அவரது மனைவி தங்கேத்லுவாய் (வயது 86)  ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையாற்றினர்.

காலை 9 மணி நிலவரம்: மிசோரமில் 7.67 %,  சட்டீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது.  அங்கு  9.93% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மிசோரமில், மாநில காங்கிரஸ் தலைவரான லால்சாவ்தா, அய்ஸ்வாலில் உள்ள மிஷன் வெங்கத்லாங் பகுதியில் உள்ள வாக்கு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதி கணிப்பதற்கு கடினம் என்றபோதும், நாங்கள் முன்னிலை பெறுவோம் என நான் நினைக்கிறேன். 22 தொகுதிகளை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது என்று முன்பே நாங்கள் கருதினோம் என கூறியுள்ளார்.

சட்டீஸ்கரின்  கொன்டா சட்டசபை தொகுதியில் உள்ள வாக்கு மையம் ஒன்றில் சட்டீஸ்கர் மந்திரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளரான கவாசி லக்ம வாக்கை செலுத்தினார். அவர் கூறும்போது, 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. நான், 6,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் தொண்டமர்கா பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.

மிசோரமில்  ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மற்றும் முதல்-மந்திரியான ஜொராம்தங்கா செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்களுடன் கூட்டணி கட்சியாக பா.ஜ.க. இல்லை. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. மிசோரமில் நாங்கள் பா.ஜ.க.வுடனோ அல்லது வேறு எந்த கட்சியுடனோ கூட்டணி எதுவும் வைக்கவில்லை. நாங்கள் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறோம். ஆனால் மிசோரமில், விவகாரங்களின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!