Skip to content
Home » காரில் சென்ற பிரபல டைரக்டரிடம் போதை ஆசாமி தகராறு…. பரபரப்பு…

காரில் சென்ற பிரபல டைரக்டரிடம் போதை ஆசாமி தகராறு…. பரபரப்பு…

  • by Senthil

பிரபல சினிமா திரைப்பட இயக்குநர் விஜய். இவர் தலைவா, தெய்வத்திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இன்று காலை இயக்குநர் விஜய் சினிமா படப்பிடிப்பிற்காக தியாகராய நகர் அபிபுல்லா சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இயக்குநர் காரில் இடித்ததாக கூறப்படுகிறது. அப்போது இயக்குநர் விஜய், தெரியாமல் நடந்திருக்கும் என நினைத்து காரில் புறப்பட்டார்.

ஆனால் தன் மேல் தவறில்லை என நினைத்துக் கொண்ட அந்த போதை ஆசாமி இயக்குநர் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இயக்குநர் விஜய்யுடன் இருந்த உதவி இயக்குநர்கள், போதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிடவே, உதவி இயக்குநர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வருவதற்குள் அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பித்து சென்றார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் விஜய் சார்பில் அவரது உதவியாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தப்பி சென்ற போதை ஆசாமியை தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், “படப்பிடிப்பிற்காக இன்று காலை சென்றபோது இளைஞர் ஒருவர் தனது கார் கண்ணாடியை லேசாக இடித்துவிட்டு சென்றுள்ளார். கண்ணாடி மீது தெரியாமல் பட்டிருக்கும் என
நினைத்துக் கொண்டு தானும் வாகனத்தை எடுத்து படப்பிடிப்பிற்காக சென்றோம். ஆனால் அந்த இளைஞர் தங்களுடைய காரை வழிமறித்து பிரச்சினையில் ஈடுபட்டார். அப்போது அவர் மேல் தான் தவறு என சுட்டிக் காண்பிப்பதற்குள் அவர் நிலைத்தடுமாறி தவறான சொற்களை பயன்படுத்தினார்.

இளைஞர்கள் இதுபோன்று காலை நேரத்தில் மதுபோதையில் வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது அது மட்டுமில்லாமல் மது அருந்தியிருந்தால் கால் டாக்ஸி அல்லது ஆட்டோவில் செல்லலாம். மாறாக மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!