Skip to content
Home » நேசக்கரம் எங்கே? முதல்வருக்கு சென்னை வாசியின் பகிரங்க கடிதம்….

நேசக்கரம் எங்கே? முதல்வருக்கு சென்னை வாசியின் பகிரங்க கடிதம்….

  • by Senthil

மரியாதைக்குரிய தமிழக முதல்வருக்கு வணக்கம்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட சென்னை வாசியான எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை உங்களுக்கு தெரியப்படுவது கடமை என நினைக்கிறேன்.. சென்னையில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி  வரலாறு காணாத வெள்ளம் .  அது  மனித தவறால் ஏற்பட்ட வெள்ளம் என்று கூறப்பட்டாலும்  வெள்ளம் வெள்ளம் தான்…. பாதிக்கப்பட்டது மக்கள் தான்.  பிழைப்போமா, அல்லது  போய்விடுவோமா என்று அஞ்சிய  சென்னை வாழ் மக்கள்,  சுமார் 1 வாரத்திற்கு பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அப்படிப்பட்ட பெருவெள்ளத்தில்  சென்னை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவிகள், நிவாரணங்கள் தவிர, தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு உதவிகள் செய்தன.  மக்களை கைதூக்கிவிட்டு, ஆறுதல் கூறி,  உதவிகள் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார்  நிறுவனங்கள் முன்வந்தன.   தாராளமாக  உதவிகள் செய்தனர். வெள்ளப்பகுதிகளுக்கு படகுகளில் சென்று உதவினர். ராணுவம் ஹெலிகாப்டரில் உணவு பொட்டலங்களை போட்டது.

ஆனால்  2015ம் ஆண்டு வெள்ளத்தை ஒப்பிடும்போது இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போதுமான அளவு இந்த முறை கிடைக்கவில்லை.  உணவு,  குறிப்பாக அத்தியாவசிய தேவையான பால் கூட இந்த முறை கிடைக்கவில்லை. இதனால்  சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும்  பொதுமக்கள்   முதல்வர் ஸ்டாலினுக்கு  பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து   உள்ளனர்.  அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

அன்புள்ள தமிழக  முதல்வர் அவர்களுக்கு……… திமுக அரசு அமைந்ததும் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தீர்கள்.  இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க மாற்ற பல திட்டங்களை கொடுத்தீர்கள்.  ஆனால் கடந்த 3 வருடம் தாங்கள் உருவாக்கி கட்டமைத்து வளர்த்த   தமிழ்நாடு ஒரே நாள்  மழையில் மணல் வீடாய் போய்விட்டதை எண்ணும்போது  எங்களுக்கே வேதனையாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் நாங்கள் எங்கள் குறைகளை உங்களிடம் தானே சொல்ல முடியும். எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களின் குரலை உங்கள் பார்வைக்கு  வைக்கிறேன். 2015ம் ஆண்டு மழையை விட  இந்த வருடம் டிசம்பர் 2ம் தேதி இரவு பெய்த மழை அதிகம். மறுநாள் பகலிலும் மழை ஓயவில்லை.  கோபத்தில் கொட்டித் தீர்த்தது மழை. எனவே  மீண்டும் 2015ஐ நினைவூட்டும் வகையில்  வெள்ளம் சூழ்ந்தது சென்னையில்.

ஆனால் இந்த முறை   நிவாரண உதவிகள்  2015 ம் ஆண்டு  கிடைத்தது போல மக்களுக்கு கிடைக்கவில்லை.  தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உதவ முன் வரவில்லை. ஏன் உதவும் கரங்கள் இந்த முறை  பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நீளவில்லை என்ற கேள்வி  சென்னை வெள்ளத்தை பார்க்கும் எல்லோர் மனதிலும்  எழுகிறது.

சென்னையில்  வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒருபுறம் பசி பசி என்ற  பரிதாப குரல்களும், பல இடங்களில் மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை,  கழிவறைக்கு செல்ல வசதி இல்லை என்ற  குமுறல்களையும் கேட்க முடிகிறது. இவை மனிதனின் அடிப்படை தேவைகள்.  மழை ஓய்ந்து 3 நாள் ஆன பின்னரும் இவற்றை செய்து தந்திருக்க வேண்டாமா?

அதிமுக, பாஜக இரண்டும் எதிர்க்கட்சிகள்.  அந்த கட்சிகள் திமுகவுக்கு கெட்டப்பெயர் எப்போது வரும், அதன் மூலம் நாம்    அரசியல்  செய்யலாம்  என நினைத்துக்கொண்டு இருக்கலாம். அது அவர்கள் அரசியல் கணக்காக கூட இருக்கலாம்.? பிரதமர் மோடி கூட  இன்றைய தேதி வரை தமிழக முதல்வரிடம் வெள்ளம், பாதிப்பு குறித்து பேசவில்லை.   எனவே பெரிய அளவில் மத்திய அரசிடம் இருந்து  நிவாரண உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

ஆனால் திமுக ஒரு கூட்டணி அமைத்து  5 வருடம் அவர்களை கட்டிக்காத்து வருகிறதே அதில் உள்ள கட்சிகள் எங்கே போனது.? யாரும் ஆபத்து நேரத்தில் உதவிக்கு வரவில்லையே? அவ்வளவு ஏன்? திமுக இளைஞரணி என்ன செய்து கொண்டு இருக்கிறது.?  மாநாடு போடவும், கார் ரேஸ் நடத்தவும், பைக் ஊர்வலம் போகவும் தான் இளைஞரணியா? சென்னை அமைச்சர்கள் சேகர்பாபு,  மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் எப்போதும் களத்தில் நிற்கிறார்கள்.  ஆனால்  உதயநிதியை உதயத்தில் பார்க்க முடிவதில்லை.  மாலை மயங்கும்  நேரத்தில் சிறிது நேரம் வருகிறார்.

சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு என இளைஞரணி உணர்ந்ததாகவும்  தெரியவில்லை.  மாநாட்டையும், கார் ரேசையும் தூக்கி எறிந்து விட்டு   வெள்ளத்தில் களமாடி, தத்தளிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட  வேண்டாமா?

உரிமைக்கு குரல் கொடுப்போம்,  உறவுக்கு கை கொடுப்போம் என்ற திமுகவின் முழக்கம்  ஆபத்தில் உதவிக்கரம் நீட்டுவோம்  என்று இளைஞர்கள் வந்திருக்க வேண்டாமா?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி எந்த கோபாவேசத்தில் பாடினானோ? அதற்கும் ஒருபடி மேலே  ஆவேசம்,  சென்னை வாசிகளில் பலர் பசி பசி என அழுகின்ற காட்சியை  பார்த்த  இப்போதையஅரசியல்வாதிகள், குறிப்பாக திமுக கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு வந்திருக்க வேண்டாமா?

ஒவ்வொரு கட்சியிலும்  இருக்கும் தொண்டர்கள் இப்படிப்பட்ட நேரத்தில் உதவ வேண்டுமா, இல்லையா என்பதை அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் முடிவுக்கே விட்டு விடலாம். ஆனால் தொண்டு நிறுவனங்கள் ஏன் உதவ முன்வரவில்லை என்பதுதான் புதிராக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் 2 லாரிகளில் நிவாரணப்பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார் என்ற ஒரு செய்தி மட்டுமே சற்று ஆறுதலாக கிடைத்து உள்ளது. மற்ற மாவட்ட அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்?

வெள்ளத்தை நாங்கள் சமாளித்து விடுவோம் என மிதப்பாக இருந்து விட்டனர் ஆளுங்கட்சியினர்.   திமுக ஐடி விங்க் வெள்ளம், பாதிப்பு, மக்களின் தேவைகளை  சமூகவலைதளங்களில் பகிர்ந்து உதவிகளை  சென்னை நோக்கி வரவழைத்திருக்க வேண்டாமா?  மொத்தத்தில் 2015 வெள்ளத்தை போல  இப்போதும் வெள்ளம் வந்தபோதிலும், உதவிகள் அந்த அளவுக்கு மக்களுக்கு கிடைக்கவில்லை. இன்னும் காலம் போய்விடவில்லை, இனியாவது அரசும் மற்றவர்களும் களத்திற்கு வந்து  தேவையுள்ள மக்களை  சந்தித்து உதவ வேண்டும் என்பது தான்  சென்னையில் தவிக்கும்  எங்களின்   வேண்டுதலாய் இருக்கிறது. முதல்வர் மனது வைத்தால் நாங்கள் விரைவில்  பழைய நிலைக்கு வந்து விடுவோம் என்கிற நம்பிக்கையில்…

உங்களின் சென்னைவாசி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!