Skip to content

செக் மோசடி வழக்கு: பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ் சிறையில் அடைய உத்தரவு

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், தான் முதன்முதலில் இயக்கிய திரைப்படத்திற்காக ‘முரளி புராஜெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தத் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பல காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின.

இது தொடர்பாகத் தொடரப்பட்ட 7 வழக்குகளில், கடந்த 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தன. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, ராஜ்பால் யாதவின் போக்கைக் கடுமையாகச் சாடினார்.

பணத்தைச் செலுத்துவதாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நடிகர் மீண்டும் மீண்டும் மீறியுள்ளதாகவும், 2024-ம் ஆண்டு முதல் அவருக்கு பலமுறை அவகாசம் அளித்தும் அவர் அற்ப காரணங்களை கூறி தட்டிக்கழித்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். படப்பிடிப்பு பணிகளைக் காரணம் காட்டி அவர் கேட்ட கூடுதல் கால அவகாசத்தை நிராகரித்த நீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்குள் சிறை கண்காணிப்பாளரிடம் சரணடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. இதன் மூலம் அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!