Skip to content
Home » இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

  • by Senthil

விசிக தலைவர் திருமாவளவன் இந்த முறையில் சிதம்பரம்(தனி) தொகுதி்யில் போட்டியிட விரும்புகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த கட்சியினர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.  அதே நேரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும்  பல வருடங்களாக  நிறைவேற்றப்படாத பல நலத்திட்டங்கள் இன்னும் அப்படியே கிடக்க்கிறது என்ற  மனக்குறையும், இது எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது. அதை தொகுதி வாரியாக பார்ப்போம்.
குன்னம் சட்டமன்றம்
1. குன்னம் தொகுதியில் கொண்டுவரப்பட்ட பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவகல்லூரி தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளதால் கிராமப்புறங்களை அதிகம் உள்ளடக்கிய குன்னம் சட்டமன்ற  தொகதி பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக திருச்சி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே உடனடியாக மருத்துவக் கல்லூரியில் தொடங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
2. மானாவரி பயிர்களான சோளம், பருத்தி பயிர்களுக்கு உரிய விலையில்லை என்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இதற்கான உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பிரதமர் விவசாயிகளுக்கு  இரண்டு மடங்கு வருமானம் தருவேன் என்றார். ஆனால் இன்னும் விவசாயிகள் நிலை அப்படியேத்தான் உள்ளது என விவசாயிகள் குமுறுகிறார்கள்.
3. வெள்ளாற்றில் ஏற்படும் வெள்ளபாதிப்புகளை கட்டுப்படுத்த கரையை பலப்படுத்தி, வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்க கோரிக்கை.
4. கரும்பு, நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.
5. கிராமப்புறங்களை முழுவதும் கொண்ட குன்னம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பேருந்து, சாலை வசதிகளை பாரதப் பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தி பிரதான நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள கிராம மக்களுக்கு வேளாண் இடுப்பொருட்களை ஏற்றி வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் சட்டமன்றம்
1. கடலூரில் இருந்து சிதம்பரம், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூருக்கு ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பலமுறை அறிவிக்கப்படும் இதுவரை அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2. மத்திய அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தரும் அரியலூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்றும், திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக சேலம் பெங்களூர் வர இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், திருச்சி -விருத்தாசலம் இடையே பயணிகள் ரயிலை அதிக வழித்தடங்களில் இயக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
3. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர், தா.பழூர் டெல்டா பகுதி விவசாயிகள் பயன்பெறும்
வகையில் கீழணையில் இருந்து கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டவேண்டும்.
4. பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை தரமான நான்கு வழிச்சாலைகயாக மாற்ற வேண்டும்.
5. திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும்.
6. அரசு மகளிர் கலைஅறிவியல் கல்லூரி வேண்டும்.

ஜெயங்கொண்டம் சட்டமன்றம்
1. ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கொண்டுவந்து,  எரிவாயு எண்ணைய் கிணறுகள் அமைக்க முயலுவதை மத்தியஅரசு கைவிட வேண்டும்.
2. முந்திரி தொழிற்சாலை அமைத்து, முந்திரி ஏற்றுமதி மற்றும் முந்திரி பழம் மூலம் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.
3. நெசவு தொழிலாளர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி நெசவு தொழிலை காக்கவேண்டும். குறைந்த விலையில் தடையற்ற நூல் கிடைக்கவும், நெசவு செய்த துணிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்வதோடு, மத்தியஅரசு நெல்லுக்கு தகுந்த விலையை வழங்கவேண்டும்.
5. பொன்னேரியை ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. பொன்னேரிக்கும், சுத்தமல்லி நிர்தேக்கத்திற்கும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
7. தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும்.
புவனகிரி சட்டமன்றம்
1. புவனகிரி சட்டமன்றத்தில் விவசாயமே பிரதானம். வீராணம் ஏரியில் இருந்து கடைமடை பகுதிக்கு போதிய நீர் வராததற்கு சென்னைக்கு தண்ணீர் கொண்டுசெல்வதே காரணம். எனவே வீராணம் ஏரியை தூர்வாரி, கடைமடைவரை தண்ணீர் அனுப்பவேண்டும்.
2. பூ உற்பத்தி அதிமாக உள்ள புவனகிரியில் அரும்பு பூவை கொண்டு சென்ட் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தொழிற்சாலை அமைத்தால் அரும்பு பூவிற்கு நல்லவிலை கிடைக்கும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு. 3. சோத்தியாதோப்பில் உள்ள பால்குளிரூட்டும் நிலையத்தினை நவீனமயமாக்கி, கொள்முதல் திறனை அதிகரிக்க வேண்டும்.
4. வெள்ளாற்று மேம்பாலத்தை மேம்படுத்தாததால், புவனகிரியில் இருந்து பி.முட்டலூர், சிதம்பரம் பைபாஸ் சாலை வழியாக சிதம்பரத்திற்கு 20கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்வதால் வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
5. புவனகிரியில் பெரிய தொழிற்சாலைகளோ, தொழிற்கல்வி, உயர்கல்வி நிலையங்களோ இல்லை என்பது பொதுமக்களின் அதிருப்தி.
6. என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த கத்தாழை, வளையமாதேவி, கீழ்பாதி, உய்யகொண்டரவி, அகரம் உள்ளிட்ட 40கிராமங்களின் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பு.
7.புவனகிரி தொகுதியில் ஒரு தீயனைப்பு நிலையம்கூட இல்லை. தீவிபத்து ஏற்பட்டால் பாதிப்பு அதிகம் என்பதால் பொதுமக்கள் அவதி. 8. புதுச்சேரி – நாகப்பட்டினம், விக்கரவாண்டி – தஞ்சாவூர் தேசிய
நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி தரமான சாலை அமைக்க கோரிக்கை. 9.சேத்தியாதோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் கரும்பு விவசாயிகள் பாதிப்பு. இதன் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி, உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய கரும்பு விவசாயிகள் கோரிக்கை.
சிதம்பரம் சட்டமன்றம்
1. மீன் பிடிக்க படகுகள் செல்லும் வகையில் கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்துதல், பரங்கிப்பேட்டை அண்ணங்கோயிலில் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ள மீன்பிடி துறைமுகத்தை உடனே திறக்க கோருதல்.
2. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துதல்.
3. வக்காரமாரி கிராம நீர்த்தேக்கத்தில் இருந்துதான் தினமும் சிதம்பரம் நகருக்கு மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. காவிரி பாயும் கொள்ளிடம் ஆற்றில் தப்பி, தவறி வந்த முதலைகள் இந்த நீர்த்தேக்கத்திற்குள் வருவதால், பொதுமக்கள் தண்ணீரில் இறங்குவதில்லை. இதனால் தண்ணீர் அசுத்தம் அடையாமல் பாதுகாக்கப்படுவதால் நாளடைவில் சுமார் 100 முதலைகள் வரை இந்த நீர்த்தேக்கத்தில் உள்ளது. மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கடித்து குதறி உயிர்ப்பலி வாங்கும் முதலைகளை பிடித்து முதலைபண்ணை அமைத்திட வேண்டும்.
4. சிதம்பரம் நகரில் புதிய பாதாள சாக்கடை திட்டம் விரைந்து செயல்படுத்தப்படவில்லை என்பதும், வளர்ந்த நகரத்திற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதும், நகர மக்களின் ஆதங்கமாக உள்ளது. தினம், தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சிதம்பரத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5. சிதம்பரம் தொகுதியின் கடலோர கடைக்கோடி கிராமங்கள் மழை காலங்களில் வெள்ளக்காடாக மாறும் பகுதியாக உள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை காத்திட நிரந்தர வெள்ளத் தடுப்பு திட்டம் ஒன்றை தீட்டி, அதனை செயல்படுத்தி வேண்டும்.
6. சுனாமி பேரலையால் அழிந்த பிறகு வசிப்பதற்கு தடை செய்யப்பட்ட எம்ஜிஆர் திட்டு பகுதியை சீரமைத்து, சுனாமி நினைவிடம் அமைத்து
சுற்றுலா தலமாக அறிவித்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு இந்த பகுதி வளம் பெற்று வருவாய் பெருகும்.
7. சிதம்பரத்தில் கவரிங் தொழில் நலிவடைந்துள்ளது. அதை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம்
1. இந்த பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் வீராணம் ஏரியால் பாசனம் பெறுகிறது. சென்னை குடிநீருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் பாசனத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டு, கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை பூர்த்தி
செய்யப்படவில்லை.
2. இந்த பகுதி கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் சிதம்பரம், கும்பகோணம் என நீண்ட தூரம் செல்ல வேண்டும். இதனால் அரசு கல்லூரிகளை காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஏற்படுத்த வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
3. புறவழி சாலை திட்டம் தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததால் பொது மக்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிதவிக்கின்றனர். அதனால் உடனடியாக புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
4. இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது. இந்த முதலைகளை பிடித்து முதலை பண்ணை அமைக்க வேண்டும்.
5. வெள்ளக் காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
6. பாசன வாய்க்கால்களை தூர் வாருவதன் மூலம் மழை காலங்களில் ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் உபரி நீரை கட்டுப்படுத்தி சேமிக்கலாம். அதுபோல் பாசன வாய்க்கால்களில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தினால் மழை காலங்களில் வெள்ள பாதிப்பை தடுக்கலாம்.7. இருப்பு பாதை, முதலை பண்ணை, பேருந்து பல்வேறுபணிமனை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
8. தொகுதி மக்களின் முக்கிய விவசாய பயிர்களான நெல், கரும்பு, உளுந்து, பயிறு போன்ற முக்கியமான உணவு பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப் படும்போது விவசாயிகளுக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும்.
9. சிதம்பரத்திலிருந்து குமராட்சி, காட்டுமன்னார்கோவில், மீன்சுருட்டி, கங்கைகொண்ட சோழபுரம் வழியாக அரியலூருக்கு ரயில்வே இருப்பு பாதை அமைக்க வேண்டுமென்பது கடலூர், அரியலூர் மாவட்டத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!