Skip to content
Home » எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்  டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ.. ‘மதுபான கொள்கை ஊழல் வழக்கின் முக்கியமானவர் கேஜ்ரிவால். இந்த ஊழலுக்கு விஜய் நாயர் என்பவர் இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார். கேஜ்ரிவாலின் வீட்டுக்கு அருகே தங்கி இருந்து அவருக்கு நெருக்கமாக விஜய் நாயர் செயல்பட்டுள்ளார். தங்களது மதுபான கொள்கை மூலம் பலனடையும் மதுபான வியாபாரிகளிடம் இருந்து ரூ.100 கோடி பெற்றுத் தருமான கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு பெறப்பட்ட பணம், பஞ்சாப் மற்றும் கோவா தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மிக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டதில் தொடர்புடைய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்சி கவிதா ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கேஜ்ரிவால் சந்தித்து, மதுபான கொள்கை விஷயத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஊழலின் மதிப்பு ரூ.100 கோடி மட்டுமல்ல. லஞ்சம் கொடுத்தவர்கள் அடைந்த பலனும் இதில் சேர்க்கப்பட வேண்டும். மதுபான வியாபாரிகள் அனைவருமே பணம் கொடுத்திருக்கிறார்கள். தெற்கு குழுமத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ.45 கோடி லஞ்சப் பணம் 2021-22-ல் நடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் பணம் கை மாறி இருக்கிறது. தாங்கள் பணமாக பெற்றதாக கோவா சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே, அரவிந்த் கேஜ்ரிவால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் மார்ச் 28-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு  கோர்ட் அனுமதி வழங்கியது.

இதனிடையே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தான் சிறையில் இருந்தபடியே அரசாங்கத்தை நடத்தப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு டில்லியில் ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!