கோவை விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜியை பற்றி முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்?..

450
Spread the love

கோவைக்கு 2 நாள் பயணமாக நேற்று விமானம் மூலம் வந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். முதலில் வ.உ.சி மைதானத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.. அப்போது அவர் பேசுகையில்  “இன்று காலையில் 9.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு நீதியரசர் அவர்களின் பதவி ஏற்பு விழாவில் காலையில் முதலமைச்சர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டேன்.

அதைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தைப் பிடித்து சரியாக 11.30 மணியளவில் நான் கோவை விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தாலும், அங்கிருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு ஏறக்குறைய இரண்டரை மணி நேரம், மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது. காரணம் வருகிற வழியெல்லாம் சாலையில் இருமருங்கிலும் பொதுமக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள், தொழிலாள தோழர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எங்களை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்திடவேண்டும் என்று முடிவு செய்து, 22-ஆம் தேதி காலையில் நான் கோவைக்கு வரவேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் என்னிடம் தேதி கேட்டார்கள். நானும் ஒப்புக்கொண்டேன். அவர் நிகழ்ச்சியைத்தான் நடத்தப் போகிறேன் என்று என்னிடத்தில் சொன்னார். ஆனால் இன்றைக்கு நடப்பது நிகழ்ச்சியல்ல, ஒரு மாநாடே நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இது அமைந்திருக்கிறது.

அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் சாதாரணமாக நிகழ்ச்சி என்று சொன்னாலே அது மாநாடுதான். இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகமாகிக்கொண்டிருக்கிறது. மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், இதை ஏற்பாடு செய்து வெற்றி கண்டிருக்கக்கூடிய, வெறும் வெற்றியல்ல, முழு வெற்றி கண்டிருக்கக்கூடிய செந்தில்பாலாஜி அவர்களை, அதேபோல் அவருக்கு துணைநின்று கொண்டிருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை, அரசு அலுவலர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். எந்தெந்த மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதிகள் இல்லையோ, அந்தந்த மாவட்டங்களுக்கு இதுபோல் அமைச்சர்களை நாங்கள் பொறுப்பேற்று பணியாற்றவேண்டுமென்று கட்டளையிட்டு அவர்களை நியமித்திருக்கிறோம். கோவை மாவட்டத்து வளர்ச்சிப்பணிகளை பார்ப்பதற்காக – கவனித்து அவ்வப்போது அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நான் நியமித்திருக்கிறேன். அவர் கடந்த ஒருவாரகாலமாக இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துபேசி, அரசு அதிகாரிகளோடு ஆய்வு நடத்தி, அந்த அடிப்படையில் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதனை நிறைவேற்றித் தருவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார். ஏதோ அறிவித்தோம் – போனோம் என்று இல்லாமல், திட்டங்கள் குறித்து இதையெல்லாம் ஆய்வு நடத்தி இதை விரைவுபடுத்துவதற்காகத்தான் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களிடம் ஒப்படைத்து, இன்றைக்கு அந்தப் பணிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஓய்வெடுக்காமல் உழைக்கக் கூடிய ஒருவரைத்தான் இந்த மாவட்டத்திற்குத் தேர்ந்தெடுத்து, உங்களிடத்தில் நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.. விழா ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் திக்குமுக்காடிய முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் ஏவ வேலு, வெள்ளக்கோவில் சாமிநாதன், எம்பி ராசா ஆகியோரை வைத்துக்கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்…

LEAVE A REPLY