Skip to content
Home » திமுக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பைத் தேடுகிறார் ஆளுநர் .. முதல்வர் குற்றச்சாட்டு..

திமுக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பைத் தேடுகிறார் ஆளுநர் .. முதல்வர் குற்றச்சாட்டு..

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 19 பக்க புகார் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது என்றும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது என்றும், இது மாநிலத்தின் நிருவாகத்தில் தலையிடுவதற்கும், சட்டமன்றத்தின் அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானதாகும் என்றும் தெரிவித்துள்ளதோடு, ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது என்றும், இது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.  இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் அவர்கள் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என்றும், சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்பமாகக் கருதப்பட்டு, ஆளுநர் அவர்கள் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் திரு. ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சி.பி.ஐ. கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் அவர்கள் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது. திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது என்றும், ஒரு மாநில ஆளுநராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 9-11-2022 அன்று ஆர்.என். ரவி அவர்கள், “உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய திரு. ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டதாகவும், அவர் மக்களின் தலைவர் அல்ல: நியமனம் செய்யப்பட்ட ஒரு நிருவாகி என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர்50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது என்றும், வளர்ச்சியும், சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக, தமிழ்நாடு 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்பதை நடுநிலையாளர்களால் இந்தத் தரவுகளைக் கொண்டு கணிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.  குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்:- இவை தவிர, கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சார்ந்த இரண்டு தீட்சிதர்கள், குழந்தைத் திருமணப் புகார்களைத் தொடர்ந்து சிதம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006-இன்கீழ் நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன என்றும், இது தொடர்பாக 8 ஆண்கள், 3 பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மே 4-ஆம் தேதி, ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும், பழிவாங்கும் நோக்கில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள்மீது மாநில அரசின் சமூக நலத்துறை 8 பொய்யான புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆளுநரின் இத்தகைய அறிக்கை, விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்ததாகவும் இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 15-6-2023 அன்று, தனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான திரு. வி.செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை தனது அமைச்சரவையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பியதாகவும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதத்தை 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பியதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். 16.6.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தனக்குக் கடிதம் எழுதியதாகவும், அதில் திரு. செந்தில்பாலாஜி அவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என்பதால், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்ற தனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் அவர்கள் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் அவர்களிடமிருந்து மேற்கண்ட கடிதம் கிடைத்ததும், திரு. செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்துரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பியதாகவும், அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க, 31-5-2023 அன்று முன்னதாக வி.செந்தில்பாலாஜி மீதான “கிரிமினல் நடவடிக்கைகள்” அவருக்கு சாதகமாக முடிவடையும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் அவர்கள் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை தான் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அக்கடிதத்தில் சட்டப்படி, ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார் அல்லது ஒரு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகமாட்டார் என்பதை விரிவாக விளக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர், (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைத் தான் குறிப்பிட்டதாகவும், லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7. உட்பிரிவு 653 என்ற வழக்கில், மாண்பமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டியதாகவும், ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆளுநரின் இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்றும் தான் ஆளுநருக்குக் கடிதம் மூலம் தெரிவித்ததாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், 29.6.2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் அவர்கள் ஒரு கடிதத்தை தனக்கு அனுப்பியதாகவும், அதில் அதில் இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆளுநரின் அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக தான் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றிரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதத்தை “நிறுத்திவைக்கும்” மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து தனக்குக் கிடைத்தாகவும், அந்த இரண்டாவது கடிதத்தில், இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு மாண்புமிகு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் தெரிவித்ததாகவும் அக்கடிதத்தில் இப்பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அனைத்து முன்னணி நாளிதழ்களும் தங்கள் தலையங்கங்களில் ஆளுநர் திரு. ஆர்.என். ரவியின் முறையற்ற செயல்பாட்டைக் கண்டித்துக் கடுமையாக விமர்சித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், தனது இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை சிறுமைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு கடிதங்களுக்கும், தான் 30.6.2023 அன்று அனுப்பிய கடிதத்தில், சட்டப்பிரிவு 164 (1)-இன்கீழ், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் மற்றும் நீக்குகிறார் என்றும், அந்த வகையில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதையும் மீண்டும் தான் வலியுறுத்தியதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, 29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொள்வார் என தான் நம்புவதாகவும், ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க உதவ வேண்டும் என்றும், அவர் மாநில மக்கள் மீதும், திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்றும், அவர் மாநிலத்தின் நலனுக்காகத் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி, அரசியலமைப்புக் குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருதமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!