Skip to content
Home » உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்…… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Senthil

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை.

நன்றாகப் படிக்கும் மகன், மருத்துவர் ஆவான் என்று தான் அவரைப் பெற்ற பெற்றோர் நினைத்திருப்பார்கள். ஆனால் நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும்.எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும், எப்போதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் உயர்வுக்குத் தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். அதற்கான சட்ட ரீதியான முயற்சியில் தான் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.  ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். முதலில் அனுப்பி வைக்கும் போது காலம் கடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அதனை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எங்காவது போய் அந்த மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பது தான் கவர்னர் ஆர்.என்.ரவியின் மோசமான எண்ணம் ஆகும்.

நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தால் வெற்றி பெறக் கூடிய தேர்வு முறையாக இருக்கிறது. அப்படி பணம் கட்டி படிக்க முடியாதவர்கள் தோற்றுப் போகிறார்கள். பணம் கட்டி இரண்டு மூன்று ஆண்டுகள் படிக்க பணம் வைத்திருப்பவர்களால் வெற்றி பெற முடிகிறது. குறைவான மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி என்ற தகுதியைப் பெற்று விட்டவர்களும், பணம் வைத்திருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலைமை உள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது பணம் படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி என்ற நிலைமையை உருவாக்கி விட்டார்கள்.

அதை மீறி இதனுள் நுழையும் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் சேர்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இது எதுவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தெரியவில்லை. புரிந்து கொள்ள மறுக்கிறார். அல்லது பயிற்சி நிறுவங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்குக் கையெழுத்து போடாமல் இருந்த நேரத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே சந்தித்தார். இப்போது ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு நாள்தோறும் மாணவர்களை வரவழைத்து கோச்சிங் சென்டரைப் போல பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

அவரிடம் நேருக்கு நேராகவே சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டார். அதற்கு கவர்னரால் பதிலளிக்க முடியவில்லை. ‘நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன்’ என்று ஆளுநர் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவரது அறியாமைதான் தெரிகிறது. அவரது கையெழுத்துக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை. அது ஜனாதிபதியிடம் தான் நிற்கிறது. இந்தச் சட்டத்தைப் பொறுத்த வரையில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏதோ அதிகாரம் இருப்பதைப் போல அவர் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் கவர்னர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். ‘கையெழுத்து போடமாட்டேன்’ என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கும் எனது ஆழமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள். பிறரையும் வாழ வையுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!